karnataka congress leader ask question about modi

50 நாட்களில் கருப்புபணத்தை ஒழித்துவிடுவேன், இல்லாவிட்டால் தூக்கில் தொங்குவேன் என்று பிரதமர் மோடி கூறியிருந்தாரே , அவரை இப்போது தூக்கில் தொங்கவிடலாமா? என்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் கேள்வி எழுப்பினர்.

போராட்டம், கொண்டாட்டம்

ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு நேற்றுடன் முடிவடைந்தது. இதை பாரதிய ஜனதா கட்சியினர் கருப்பு பண எதிர்ப்பு நாளாக இனிப்புகளை வழங்கி நாடுமுழுவதும் கொண்டாடினர். அதே சமயம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கறுப்புதினமாக அனுசரித்து நாடுமுழுவதும் போராட்டம் நடத்தினர்.

காங். பேரணி

இந்நிலையில் பெங்களூரு நகரில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கறுப்புதினம் அனுசரிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. பரமேஸ்வரா, முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் ராமலிங்கா ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர். பெங்களூரு நகரில் மவுரியா சர்க்கில் பகுதியில் இருந்து சுதந்திரப்பூங்கா வரை பேரணியும் நடத்தப்பட்டது.

பொய்யான தகவல்கள்

பேரணியின் போது காங்கிரஸ் செயல்தலைவர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், “ . கருப்புபணத்தையும், வெள்ளை பணத்தையும் இந்த அரசால் பிரித்துப் பார்க்க முடியாமல் 99 சதவீதம் தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்துவிட்டதாக அரசுகூறுகிறது. பொய்யான புள்ளிவிவரங்களையும், தகவல்களையும் கொடுத்து, பிரதமர் மோடி இன்று நாளேடுகளில் விளம்பரம் செய்துள்ளார்.

தூக்கிலிடவா?

ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் போது, 50 நாட்களில் அனைத்தையும் மாற்றிவிடுவேன், ரூபாய் நோட்டு தடை தோல்வியுற்றால் என்னை தூக்கிலிடுங்கள் என்று மோடி கூறினார். இப்போது அவரை என்ன செய்ய?. நாங்கள் இப்போது அவரை தூக்கிலிட வேண்டுமா?’’ என்று தெரிவித்தார்.

மக்கள்மீது சர்ஜிகல் ஸ்டிரைக்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசுகையில், “ தீவிரவாதம், கருப்புபணத்துக்கு எதிரான சர்ஜிகல்ஸ்டிரைக் என ரூபாய் நோட்டு தடையை பா.ஜனதாவினர் குறிப்பிட்டார்கள். ஆனால், சாமானிய மக்கள்மீதான சர்ஜிகல்ஸ்டிரைக்காக மாறிவிட்டது. நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க மோடி தயாராக இருக்கிறாரா?. மக்கள் அனுபவித்த துன்பங்கள் அவருக்கு தெரியும். அதனால்தான், விவாதிக்க அவர் தயாராக இல்லை’’ என்றார்.