Asianet News TamilAsianet News Tamil

கர்நாடகா பட்ஜெட்டில் மேகதாது அணைக்கு முக்கியத்துவம்; விரைவில் அனுமதி என சித்தராமையா அதிரடி!!

கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று தனது 15வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக  தெரிவித்துள்ளார்.

Karnataka CM Siddaramaiah says in budget all arrangements ready to build Mekedatu dam
Author
First Published Feb 16, 2024, 1:56 PM IST

கர்நாடகா முதல்வர் சித்தராமையா அந்த மாநிலத்தின் நிதியமைச்சராகவும் இருந்து வருகிறார். இன்று இவர் தாக்கல் பட்ஜெட் இவரது 15வது பட்ஜெட்டாகும். இந்த ஆண்டு பட்ஜெட் செலவு ₹3.71 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நேரத்தில் இந்த பட்ஜெட் முக்கியமான பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது.

எஸ்சி/எஸ்டி சமூகத்திற்கு ரூ. 39,121 கோடி ஒதுக்கீடு:

2024-25 ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட சாதி துணைத் திட்டத்திற்கு ரூ. 27,674 கோடியும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் துணைத் திட்டத்திற்கு ரூ. 11,447 கோடியும், மொத்தம் ரூ. 39,121 கோடி ஒதுக்கி எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு சித்தராமையா முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள்: 
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அரசு, இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக முறையே ரூ. 86,423 கோடியும், ரூ. 54,617 கோடியும் ஒதுக்கியுள்ளது. அங்கன்வாடிக்கு ரூ. 300 கோடி ஒதுக்கி மேம்படுத்த சித்தராமையா உத்தரவாதம் அளித்துள்ளார். கிரகலட்சுமி திட்டத்திற்கு ரூ. 28, 608 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

கர்நாடகாவின் பிடிவாதமும், கேரளாவின் முயற்சியும் தமிழக விவசாயிகளுக்கு துரோகத்தை இழைக்கும் - தினகரன் எச்சரிக்கை

மேகதாது விவகாரம்:
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் மேகதாது அணை விவகாரமும் இன்று கர்நாடகா பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இன்று தாக்கல் செய்து இருக்கும் பட்ஜெட்டில் அணை கட்டுவதற்காக நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு மற்றும் வெட்டப்பட வேண்டிய மரங்கள் தொடர்பான பணிகள் முடிந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மேகதாது அணை  கட்டுவதற்காக தனி அமைப்பும், இரண்டு துணை அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. 

குடிநீர் தேவைக்குத் தான் முன்னுரிமை: கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திட்டவட்டம்

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி ஆற்று தண்ணீரின் வரத்து பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறது. விவசாய அமைப்புகளும் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றன. 

இந்த நிலையில் தான் அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்றும் விரைவில் அணை கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படும் என்று சித்தராமையா பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். 

மேகதாது அணையும் நிதி ஒதுக்கீடும்:
தற்போது துணை முதல்வராக இருக்கும் டிகே சிவகுமாரின் கனகபுரா தொகுதியில்தான் மேகதாது அணை கட்டப்படுகிறது. ரூ. 9000 கோடியில் இந்த அணையைக் கட்டுவதற்கு ஏற்கனவே கர்நாடகா அரசு தீர்மானித்து இருந்தது. பெங்களூர் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அணையை கட்ட வேண்டியது கட்டாயம் என்று கர்நாடகாவில் எந்த அரசு பதவிக்கு வந்தாலும் கூறி வருகிறது.
 
மேலும் அணையில் இருந்து 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் கர்நாடகா திட்டமிட்டுள்ளது. அணை கட்டுவதன் மூலம் தமிழ்நாடு, கர்நாடகா இரண்டு மாநிலங்களும் ஆதாயம் அடையலாம் என்று கர்நாடகா கூறி வருகிறது. 

காவிரி ஆற்றில் இருந்து கர்நாடகா அரசு தற்போது 104.59 டிஎம்சி தண்ணீர் பெறுகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால், மேலும் 67.14 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கலாம். இதனால் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு குறையும் என்ற வாதம் தமிழ்நாட்டின் சார்பிலும், விவசாயிகளின் சார்பிலும் வைக்கப்பட்டு வருகிறது. இதனால், மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று பட்ஜெட்டில் மேகதாது அணை உறுதியாக காட்டப்படும் என்றும் விரைவில் இதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios