கர்நாடகா சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை: 9 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் சித்தராமையாவிடம் ஒப்படைப்பு!

கர்நாடகா சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை 9 ஆண்டுகளுக்கு பிறகு அம்மாநில முதல்வர் சித்தராமையாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Karnataka Caste census report submitted to Chief Minister siddaramaiah after 9 years smp

தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை என்பதால், மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பையே நடத்ததாத மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை. இருப்பினும், மாநில அரசுகள் விரும்பினால் அவர்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறிவிட்டது.

அந்த வகையில், பீகார் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பீகார் தவிர வேறு சில மாநிலங்களும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளன. மேலும், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை 9 ஆண்டுகளுக்கு பிறகு அம்மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 4,000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அறிக்கையை அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே ஒப்படைத்தார்.

மாநிலங்களவை தேர்தல் சலசலப்பு: பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை!

கர்நாடக மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஆனால், அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதில் சிக்கல் நிலவியது. அந்த அறிக்கையில் கையொப்பமிட அப்போதைய உறுப்பினர் செயலாளர் மறுத்தார். சில ஆதிக்க சமூகங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. எச்.டி.குமாரசாமி, பி.எஸ்.எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகிய மூன்று முன்னாள் முதல்வர்கள் கர்நாடக மாநில சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏற்கவில்லை.

இதனிடையே, கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை எற்றுக் கொள்ளப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த அறிக்கையை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என  முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைய வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டேவின் பதவிக்காலம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட நிலையில், அம்மாநில சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை முதல்வரிடம் அவர் ஒப்படைத்துள்ளார்.

இந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அதன் பரிந்துரைகள் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு அதனை செயல்படுத்துவது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அலுவலக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios