Asianet News TamilAsianet News Tamil

மாநிலங்களவை தேர்தல் சலசலப்பு: பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை!

மாநிலங்களவை தேர்தல் பல்வேறு  சலசலப்புகளுக்கு மத்தியில் முடிவடைந்தபோதும், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை

Rajya Sabha election 2024 BJP does not have majority  smp
Author
First Published Feb 29, 2024, 1:50 PM IST

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட 41 வேட்பாளர்கள் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டனர். அதேசமயம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மொத்தம் 15 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

உத்தரப்பிரதேசத்தில் காலியாக இருந்த 10 மாநிலங்களவை இடங்களுக்கு ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான சமாஜ்வாதி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. 7 உறுப்பினர்களை தேர்வு செய்ய தேவையான எம்.எல்.ஏ.க்களை கொண்டிருந்த பாஜக, கூடுதலாக ஒரு வேட்பாளரை களம் இறக்கியது. அதாவது பாஜக சார்பில் மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சமாஜ்வாதி கட்சி சார்பில் 3 பேர் போட்டியிட்டனர்.

திமுகவை ஒழிப்பேன்.. இல்லாமல் ஆக்கிவிடுவேன் கூறுவதா..! இப்படி சொன்னவர் என்ன ஆனார்கள் தெரியுமா?- ஸ்டாலின் பதிலடி

ஆனால், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள், சமீபத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் ஐக்கியமான ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. ஆகியோர் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், பாஜகவின் 8ஆவது வேட்பாளர் சஞ்சய் சேத்  வெற்றி பெற்றார். உத்தரப்பிரதேசத்தில் 7 இடங்களை பெற வேண்டிய பாஜக 8 இடங்களை பெற்றது. சமாஜ்வாதி கட்சி சார்பில் 2 பேர் போட்டியிட்ட நிலையில், அலோக் ரஞ்சன் தோல்வியடைந்தார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளருக்கு பாஜக எம்.எல்.ஏ. மாற்றி வாக்களித்தார். மேலும் ஒரு எம்.எல்.ஏ. வாக்களிக்காததால் பாஜக-மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி வேட்பாளர் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கான் வெற்றி பெற்றார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 4 இடங்களில் 3 இடங்களை காங்கிரஸும், ஒரு இடத்தை பாஜகவும் கைப்பற்றியது.

அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; பிரதமரின் பேச்சை சுட்டிக்காட்டி திருமா எச்சரிக்கை

அதேபோல், இமாச்சலப்பிரதேசத்தில் ஒரு மாநிலங்களவை இடத்துக்கு தேர்தல் நடந்தது. காங்கிரஸ் ஆளும் அம்மாநிலத்தில் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் சிங்வி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் கட்சி மாறி வாக்களித்ததால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

மொத்தம் 15 மாநிலங்களவை இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 10 இடங்களை பாஜக கைப்பற்றியது. ஆனாலும், மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மையை இன்னும் அக்கட்சி பெறவில்லை. மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மைக்கு 121 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜகவிடம் 97 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களையும் சேர்த்தால் மொத்தம் 117 எம்.பி.க்கள் பாஜக வசம் உள்ளனர். பெரும்பான்மை கிடைக்க பாஜக கூட்டணிக்கு இன்னும் 4 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios