Laxman Savadi: பாஜகவில் இருந்து விலகினார் லட்சுமண் சுவதி; தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிருப்தி

கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும் மூத்த தலைவருமான லட்சுமண் சுவதி தான் சார்ந்திருந்த பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.

Karnataka BJP Laxman Savadi quits party after being denied ticket for assembly polls next month

முன்னாள் கர்நாடக துணை முதல்வரும் அந்த மாநில மூத்த தலைவருமான லட்சுமண் சுவதி கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என்று கூறப்படுகிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 189 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில் தனது பெயர் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த லட்சுமண் சுவதி கட்சியில் இருந்து விலக முடிவு செய்தார் எனத் தெரிகிறது.

லட்சுமண் சுவதி முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் தீவிர விசுவாசி ஆவார். எடியூரப்பாவின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி விகித்தவர். அதுமட்டுமின்றி லிங்காயத் சமூகத்தினர் இடையே சக்திவாய்ந்த தலைவராகவும் கருதப்படுபவர்.

மூன்று முறை அதணி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தவர் லட்சுமண் சவதி. ஆனால் இந்த முறை அதணி தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போது மகேஷ் குமதல்லி அறிவிக்கப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் இதே அதணி தொகுதியில் லட்சுமண் சுவதியை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவர் குமதல்லி.

அதுமட்டுமின்றி, 2019ஆம் ஆண்டு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து பி.எஸ். எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்தவர்களில் குமதல்லியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் கைவிடப்பட்டவர் மூத்த தலைவர்கள் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் ஒருவர். ஆனால், அவர் தனக்கு சீட் கேட்டு தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லி செல்கிறார்.

மற்றொரு மூத்த தலைவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்தவராக, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார்.

மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார். இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios