தம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அரசியல் சாசனப்படி செல்லுமா என கேட்டு முன்னாள் நீதிபதி கர்ணன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த கர்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். அப்போது அப்போதைய வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்ணன் தடை உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட பல நீதிபதிகள் ஊழல் செய்வதாக கர்ணன் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

இவரின் இந்தச் செயல்பாடு, நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. மேலும் கர்ணனை நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்தது.

இதனால் ஆத்திரமடைந்த கர்ணன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அமர்வுக்கு எதிரான உத்தரவுகளை பிறப்பித்தார்.

இதை தொடர்ந்து அடிக்கடி உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்மறையாக கர்ணன் செயல்பட்டு வந்ததால் அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசாருக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

இதனைத் தொடர்ந்து 40 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த கர்ணனை கொல்கத்தா போலீசார்கோவையில் கைது செய்தனர். அவருக்கு 6 மாத சிறைதண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே கர்ணன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதைதொடர்ந்து கர்ணன் தன் மீதான தண்டனையை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தார்.

இந்நிலையில், இன்று தம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அரசியல் சாசனப்படி செல்லுமா என கேட்டு முன்னாள் நீதிபதி கர்ணன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.