கார்கில் வெற்றி தினம் இன்று ஜூலை 26 ஆம் தேதி இந்தியா முழுதும் கொண்டாடப்படுகிறது. கொண்டாடப்படுகிறது என்று சொல்வதை விட  பாகிஸ்தானின் பயங்கரவாத வாலாட்டத்தை மொத்தமாகக் கத்தரிப்பதற்காக உயிர் தியாகம் செய்த 527 இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் இன்று போற்றப்படுகிறது என்று சொல்லலாம்.

கார்கில் என்றதுமே ஒரு கம்பீரம் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சுக்குள்ளும் எழுந்து நிற்கிறது. 1971  போரில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் காஷ்மீரின் எல்லை வழியாக இந்தியாவுக்கு தொல்லை கொடுக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டே இருந்தது அடிபட்ட பாம்பாக.

1998 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையை அப்போதைய பாரத பிரதமர் வாஜ்பாய் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.  இதற்கு மிகப்பெரும் பங்களிப்பை செய்தார்  தமிழகத்தைச் சேர்ந்த அணு விஞ்ஞானி அப்துல் கலாம். அப்போது அமெரிக்காவுக்கே மூக்கு வியர்த்தபோது, பாகிஸ்தானுக்கு வியர்க்காமல் இருக்குமா என்ன? அணு ஆயுத சோதனை என்று பாகிஸ்தானும் நடத்தியது.

இரு நாடுகளுக்கும் இடையே இதனால் பாதுகாப்பு ரீதியான டென்ஷன் ஏற்பட 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  லாகூரில் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்படி காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கக் கூடாது என்று இந்தியா கடுமையாக கேட்டுக் கொண்டது.

பாகிஸ்தான் தன் வார்த்தையை நிறைவேற்றியதாக இந்திய துணைக் கண்டத்தில் ஏது சரித்திரம்?

அதே ஆண்டு குளிர் காலம் தொடங்கிய மே மாதத்தில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் கடும்  உறை பனியை சாதமாகக் கொண்டு மெல்ல மெல்ல  மாறு வேடங்களில் எல்லை கிராமங்கள் வழியாக இந்தியாவில் ஊடுருவத் தொடங்கினர். அமைதி உடன்படிக்கையை மதித்து இந்தியா நடந்துவந்த நிலையில், காஷ்மீரை மீண்டும் சர்வதேச பிரச்னையாக்கி குளிர்காய்வதற்காகத்தான் இந்தியா மீது இந்த ஊடுருவல் பயங்கரவாதத்தை நடத்தியது பாகிஸ்தான்.  அப்போது வாஜ்பாய் ஆட்சி காலத்தில் காஷ்மீரில் ஜனநாயகம் தழைக்கத் தொடங்கியிருந்ததும் பாகிஸ்தானின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது.  

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர், பயங்கரவாதிகள் ஊருவலை எல்லையோர கிராம வாசிகளின் உதவியோடு உணர ஆரம்பித்தது இந்திய ராணுவம். முதலில் அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று நினைத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை துவக்கியது இந்தியா. ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தினரும் ஊடுருவலில் இருக்கிறார்கள் என்றும் 100 கிலோ மீட்டர் தாண்டி  200 கிலோ மீட்டர் வரை அவர்கள் ஊடுருவல் செய்திருக்கிறார்கள் என்றும் உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, உடனடியாக பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் ராணுவ பயங்கரவாதத்தை ஒடுக்க இந்திய துருப்புகள் உடனடியாக காஷ்மீர் லடாக், கார்கில் பகுதியில் குவிக்கப்பட்டனர். சுமார் இரண்டு லட்சம் போர் வீரர்கள் களமிறக்கப்பட்டு, ‘ஆபரேஷன் விஜய்’ என்று இந்த நடவடிக்கைக்கு பெயர் சூட்டப்பட்டது. 

1999 மே இரண்டாவது வாரத்தில் தொடங்கிய இந்த ஆபரேஷன் விஜய் சுமார் அறுபது நாட்கள் நீடித்தது. ஒட்டுமொத்தமாக அனைத்து பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும், பயங்கரவாதிகளையும் விரட்டியடித்து கார்கில் பகுதியில் நம் மூவண்ணக் கொடியை ஜூலை 26 ஆம் தேதி பறக்க விட்டனர் நமது ராணுவ நாயகர்கள். 

1999 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி,  ‘கார்வில் விஜய் திவாஸ்’ என்ற கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், 

“இந்த கார்கில் வெற்றித் திருநாளில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் நமது முப்படைகளின் தியாக உனர்வையும், வீர உணர்வையும் மெச்சுகிறான். கார்கில் தியாக நாயகர்களுக்கு நமது வீரவணக்கத்தை செலுத்துகிறோம். அவர்களின் குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த இந்தியாவின்  மரியாதையை பதிவு செய்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திரமோடி தனது செய்தியில், “இந்தியா இந்த தேதியை என்றென்றும் தன் நெஞ்சில் கம்பீரத்துடன் நினைவு வைத்திருக்கும். நமது உறுதிமிக்க அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் அரசியல் தலைமையின் கீழ் ஆபரேஷன் விஜய் நடந்தது. வாஜ்பாய் முன்னின்றார், வாஜ்பாய் ராணுவத்தினருக்கு உறுதியை அளித்தார். உலக அரங்கில் இந்தியாவின்  செம்மாந்த  கம்பீரத்தை நமது வாஜ்பாய் அவர்கள் நிலைநாட்டினார்’’ என்று கார்கில் வெற்றியை வாஜ்பாய்க்கு அர்ப்பணித்துள்ளார் மோடி.

பாகிஸ்தானில் இன்று ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் என்றுமே ஜனநாயகத்தையோ, ஒப்பந்தங்களையோ மதிப்பதில்லை என்பதைத்தான் கார்கில் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அத்தோடு இந்தியா ஜனநாயகத்தை மதிக்கும், அதேநேரம் வாலாட்டினால் ராணுவ பலத்தைக் கொண்டு பாகிஸ்தானை மிதிக்கும் என்பதும் உலகத்துக்கு கார்கில் மூலம்  செய்தியாக சொல்லப்பட்டது.