சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த் என்ற 32 வயது ஆசிரியை சபரிமலைக்கு 41 நாட்கள் விரதம் இருந்து செல்லப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதற்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் சபரிமலை செல்வேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அக்டோபர் 8-ம் தேதி சபரிமலைக்குச் செல்வதற்காக விரதத்தையும் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் ஃபேஸ்புக் வழியாக ரேஷ்மாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரேஷ்மா கூறுகையில் சபரிமலை ஏறினால் உயிருடன் திரும்பமாட்டாய்' என்று மிரட்டல் விடுக்கிறார்கள். என்னை மிரட்டுவது ஆண்களா அல்லது பெண்களா என்று தெரியவில்லை. கண்ணபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்'' என்று கூறியுள்ளார். 

மேலும் சபரிமலைக்கு செல்வதில் உறுதியாக உள்ளேன். 18 படிகளில் ஏறிச் செல்வேன். நம் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது போன்றது தான், மாதவிடாய் காலமும். அதனால், எவ்வித மன உறுத்தலும் இல்லாமல், 41 நாட்கள் விரதம் இருந்து, சபரிமலைக்கு செல்ல உள்ளேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கு அவரின் கணவரும் ஆதரவளித்துள்ளார்.