கர்நாடகா பந்த்.! கெம்ப கவுடா விமான நிலையத்திற்குள் புகுந்த கன்னட அமைப்பினர்- குண்டுகட்டாக வெளியேற்றிய போலீஸ்
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு கர்நாடாகவில் இன்று பந்த் அறிவித்துள்ள நிலையில், விமானங்கள் மட்டும் இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் கெம்ப கவுடா விமான நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி பிரச்சனை- கர்நாடகாவில் பந்த்
காவரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய வகையில் கர்நாடக அரசு தண்ணீர் தரவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உருவானது. இதனையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் தருமாறு பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தங்கள் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு தெரிவித்தது.
இதனையடுத்து தமிழக அரசு காவிர மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது. இருந்த போதும் உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக 5 ஆயிரம் கன அடி 15 நாட்களுக்கு திறந்து விடப்பட்டது.
கர்நாடகாவில் பந்த்- 144 தடை உத்தரவு
இதனையடுத்து மீண்டும் 3 ஆயிரம் கன அடி திறக்க உத்தரவிடப்பட்டது. இதனை கர்நாடக அரசு மறுத்துள்ளது. இந்தநிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெங்களூரில் முழு அடைப்பு நடைபெற்றது. தற்போது கர்நாடக மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடைகள், பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக வாகனங்கள் கர்நாடக எல்லைக்குள் அனுமதிக்கபடாமல் நிறுத்தப்பட்டது.
விமானநிலையத்தில் முற்றுகை போராட்டம்
இந்தநிலையில் விமான சேவை செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கன்னட அமைப்பினர் கெம்ப கவுடா விமான நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். இதனையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் போலீசார் போராட்டக்காரர்களை அந்த பகுதியில் இருந்து குண்டுகட்டாக தூக்கி சென்று வெளியேற்றினர். இதன் காரணமாக விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்
கர்நாடகாவில் பந்த்.! தமிழக எல்லையில் பதற்றம்- நிலைமையை கண்காணிக்க மாவட்ட எஸ்பிகளுக்கு டிஜிபி உத்தரவு