நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 20 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர்தான் இந்த ஆசிரமத்தை நிறுவி பல்வேறு ஆன்மிகப் பணிகளைச் செய்து வந்தார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நடத்தி வரும் இவருக்கு சென்னையில் மட்டும் 20 இடங்களில் கிளைகள் உள்ளன. அண்மையில் இந்த ஆசிரமம் சர்ச்சை ஒன்றில் சிக்கியது. வெளிநாட்டு பக்தர்களுக்கு போதை பொருள்களைக் கொடுத்ததுடன், சிறப்பு பூஜை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரூபாய் வசூல் செய்யப்படுகிறது என்ற புகார் எழுந்தது. இவரது மகன் கே.வி கிருஷ்ணா பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். 

இந்நிலையில், கல்கி ஆசிரமம் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. அதன் பேரில் நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட வருவானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில், ஆயிரம் விளக்கில் உள்ள கல்கி பகவானின் மகன் கிருஷ்ணனின் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் 20 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகளவில் நிலம் வாங்கியதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.