தமிழக மக்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து 3-வது ஆண்டாக நடக்க முடியாமல் போனது குறித்து வேதனை தெரிவித்துள்ள முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ,  மிருகவதைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

மத்தியஅரசு ஜல்லிகட்டு என்ற  பெயரில்தானே போட்டி நடத்த அனுமதி மறுக்கிறது. அதை பொங்கல் விளையாட்டு என்ற பெயரில் நடத்தலாமே என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடந்த ஆண்டு ஆலோசனை கூறி இருந்தார். அது இப்போது பொருந்துமா என்பது சமூக வலைதளங்களில் கேள்வியாக எழுந்துள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு, அரசியல் கட்சியினர், அமைப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வந்த நிலையில், தற்போது இந்த பிரச்சினையை மாணவர்கள் கையில் எடுத்துள்ளனர். பொங்கள் திருநாளுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் பிரச்சினை தீவிரமாகி வருகிறது.

இந்நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு வேதனை தெரிவித்துள்ள முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது-

ஜல்லிகட்டு மீதான தடை எப்போது நீக்கப்படும் என்று தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஒரு விலங்கையும், மனிதனையும் சமதளத்தில் வைத்துப் பார்க்கக்கூடாது. உதாரணமாக, குளத்தில் மீன்பிடிக்கிறோம். தூண்டிலில் மீன் சிக்கி அதை தரையில் கொண்டு வந்துபோடும் போது, மூச்சுத்திணறி மீன் செத்து விடுகிறது. இதனால் மீனை கொடுமைப்படுத்துகிறோம் என்று அர்த்தமா?. அந்த மீனைப் பிடித்து சமைத்து சாப்பிடுகிறோம். அதற்காக மீனை சாப்பிட தடை விதிக்கமுடியுமா?

ஆதலால், மிருகவதைச் சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். இதை தமிழக மக்களின் சார்பாக வேண்டுகோளாக வைக்கிறேன். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு ஐடியா......

முன்னதாக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த  ஒரு ஐடியா கொடுத்து இருந்தார்.  அதில் அவர் கூறுகையில், “

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து தமிழர்கள் கவலைப்பட தேவையில்லை. பிரச்சினை வரும்போது காஷ்மீர் பண்டிட்கள் போல் செயல்படலாம். தமிழக அரசே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கலாம்.

உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தான் தடை விதித்தது. அதனால் இவ்விளையாட்டுக்கு பெயரை மட்டும் மாற்றுங்கள் போதும். ‘பொங்கல் விளையாட்டு' என்று பெயர் மாற்றி தொடர்ந்து விளையாடுங்கள், அதற்கு எந்த தடையும் இல்லை என  தனது முகநூல் பக்கத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.