Supreme Court: உலகிலேயே பிசியானது இந்திய உச்ச நீதிமன்றம்தான்: சிங்கப்பூர் நீதிபதி பாராட்டு
கடுமையாக உழைக்கும் நீதிபதிகளைக் கொண்ட இந்திய உச்ச நீதிமன்றம்தான் உலகின் பிசியான நீதிமன்றம் என்று சிங்கப்பூர் தலைமை நீதிபதி பாராட்டியுள்ளார்.
உலகிலேயே மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் நீதிமன்றம் இந்திய உச்ச நீதிமன்றம்தான் என்று சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறியுள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ள உரை தொடரில் சனிக்கிழமை கலந்துகொண்டு பேசியபோது இவ்வாறு தெரிவித்திருக்கிறார். மேலும், இந்திய நீதிமன்ற நீதிபதிகள் மிகக் கடினமாக உழைக்கிறார்கள். நீதி வழங்கல் முறை பயனாளர்களை மையமாகக் கொண்டதாக இருப்பதற்கு முக்கியத்துவத்தை அளித்துள்ளனர். திறமை மற்றும் நேர்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நீதிபதிகள் தேர்வு நடைபெறுகிறது என்றும் சுந்தரேஷ் மேனன் பாராட்டி உள்ளார்.
நீதிமன்றங்கள் நீதிபதிகளுக்காகவோ அல்லது வழக்கறிஞர்களுக்காகவோ உருவாக்கப்பட்டவை அல்ல. வழக்குத் தொடுப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டவை என்று தெரிவித்த நீதிபதி மேனன், வழக்கு தொடுக்க வருபவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் வாதாட வசதியான சூழல் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கைக் குறைவு ஏற்படாமல் இருக்க, தீர்ப்புகள் சட்டபூர்வமான கண்டுபிடிப்புகளாக பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் விதமாக இருக்கவேண்டும் என நீதிபதி மேனன் எடுத்துரைத்தார்.
தலைமை நிதீபதி சந்திரசூட் பேசுகையில் பல்வேறு புள்ளிவிவரங்களைக் காட்டிப் பேசினார். கடந்த மூன்று மாதங்களில் 12,471 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன என்றும் அவற்றில் 12,108 வழக்குகள் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.
தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைகளின் உரிமை மீறல்களைத் தீர்ப்பதற்காக, பொதுநலம் ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுவதற்கு வசதியாக 1980களில் இருந்து உச்ச நீதிமன்றம் எடுத்த தொடர் முயற்சிகளை நீதிபதி சந்திரசூட் விரிவாகக் கூறினார்.
62 வயதாகும் நீதிபதி சுந்தரேஷ் மேனன் 48 வயதில் சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலாகப் பொறுப்பேற்றார். பின்னர் 50 வயதில் தலைமை நீதிபதியானார்.
Exclusive : பாஜகவில் சேரமாட்டேன்! - காங்.,லிருந்து விலகிய அனில் அந்தோனி பேட்டி!