பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) இந்திய ஓநாயை (Canis lupus pallipes) முதன்முறையாக மதிப்பிட்டு, 'நலிவுற்ற' இனமாகப் பட்டியலிட்டுள்ளது. சுமார் 3,093 மட்டுமே உள்ள இந்த ஓநாய்கள், வாழிட இழப்பு மற்றும் மனித அச்சுறுத்தல்களால் அருகி வருகின்றன.
இந்திய ஓநாய் (Canis lupus pallipes) இனத்தை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) முதன்முறையாகத் தனியாக மதிப்பிட்டுள்ளது. இந்த ஓநாயை கேனிஸ் (Canis) பேரினத்தின் ஒரு தனி இனமாக வகைப்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, இந்திய ஓநாயின் உலகளாவிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நலிவுற்ற உயிரினங்கள் பட்டியலில் இந்திய ஓநாய்:
IUCN அமைப்பின் கேனிட் (canid) நிபுணர்கள் குழுவின் மதிப்பீட்டின்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுவதும் உள்ள இந்திய ஓநாய்களின் எண்ணிக்கை சுமார் 3,093 (2,877 முதல் 3,310 வரை) ஆக உள்ளது. இந்தக் குறைந்த எண்ணிக்கையின் காரணமாக, இந்திய ஓநாய் 'நலிவுற்ற' (Vulnerable) பிரிவில் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
வாழிட இழப்பு மற்றும் மனிதர்களின் அச்சுறுத்தலே இதன் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியக் காரணம் என்று நிபுணர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.
இந்திய ஓநாய் இனத்தின் தொன்மை
மனிதர்கள் இந்தியத் துணைக்கண்டத்திற்கு வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே உருவான, உலகிலேயே மிகவும் தொன்மையான ஓநாய்களில் இந்திய ஓநாயும் ஒன்றாகும். புலி கூட 11 நாடுகளில் காணப்படும் நிலையில், இந்த ஓநாய் கிட்டத்தட்ட முழுவதுமாக இந்தியாவுக்குள் மட்டுமே வாழ்கிறது. பாகிஸ்தானில் சுமார் 10 முதல் 20 ஓநாய்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (WII) மூத்த விஞ்ஞானி பிலால் ஹபீப் இது குறித்துப் பேசுகையில், "புலிகளின் எண்ணிக்கை நிலையாக இருக்கும்போது, இந்திய ஓநாயின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஓநாய்கள் பெரும்பாலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே வாழ்வதுதான் இதற்கு முக்கியக் காரணம். மேலும், இவை எளிதில் மனிதர்களால் தொந்தரவுகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றன. இந்த இனத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் உடனடியாகக் கவனம் செலுத்தப்பட்ட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
'கேனிஸ்' பேரினத்தின் 8வது இனம்?
பொதுவாக 'சாம்பல் ஓநாய்' (Gray wolf - Canis lupus) என்று அறியப்படும் இந்தப் பேரினத்தில் (Genus) தற்போது ஏழு இனங்கள் IUCN-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்திய ஓநாய் சேர்க்கப்படும் பட்சத்தில், இது எட்டாவது அங்கீகரிக்கப்பட்ட இனமாக இருக்கும் என்று இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் Y.V. ஜாலா தெரிவித்துள்ளார்.
இந்திய ஓநாய் குறித்த IUCN-ன் மதிப்பீட்டின்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுவதும் உள்ள இந்திய ஓநாய்களில் வெறும் 12.4% மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் உள்ளன. பெரும்பாலானவை அரசு அமைப்புகளால் முறையாகப் பாதுகாக்கப்படாத பகுதிகளுக்கு வெளியே காணப்படுகின்றன. இதனால் அவை மனித அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றன. அடுத்த பத்தாண்டுகளில் இந்த அச்சுறுத்தல்கள் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

