judgement in nirpaya rape case
நாட்டையே உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி 'நிர்பயா' கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கின் இன்று இறுதி தீர்ப்பு வெளியாகவுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு, டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் துணை மருத்துவப் படிப்பு படித்து வந்த மாணவி நிர்பயாவை, 6 பேர் அடங்கிய கும்பல் ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, இரும்பு கம்பியால் சிதைத்து வெளியே தூக்கி வீசினர்.
படுகாயமடைந்த அவர் 2 வாரங்களாக டெல்லியில் சிகிச்சைப் பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும், நிர்பயாவின் இந்த மரணம் இந்தியாவைத் தலைகுனியச் செய்தது. இந்த வழக்கில், பஸ் டிரைவர் ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டான். 18 வயது இளம் குற்றவாளி சிறுவன் என்பதால் அவன் மூன்று வருடங்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.
மற்ற 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் பிற்பகல் 2 மணிக்கு மேல் உச்சநீதிமன்றத்தில் அளிக்கிறார்கள்.
