ஜே.என்.யூ. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது கடந்த நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஜனவரி 5-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இரவில் முகமூடி அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் வந்து தாக்குதல் நடத்தினர். இதில் மாணவ சங்க தலைவி ஆஷிஜோஷ் மண்டை பிளக்கப்பட்டது. மேலும், பல்வேறு மாணவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். 

இந்த தாக்குதலுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என இடதுசாரிகளும், அகில பாரதிய வித்யார்த்த பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினரும் மாறி, மாறி குற்றம்சாட்டினர். ஆனால், மர்மம் நீடித்து வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, இந்த தாக்குலுக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி. அமைப்புகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக மாணவ சங்க தலைவி ஆஷிஜோஷ் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், பல்கலைக்கழக துணைவேந்தரை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்நிலையில், ஜே.என்.யூ.வில் பல்கலைக்கழகத்தில் தேச விரோத செயல்கள் அதிகம் நடப்பதால், நாங்கள் தான் இந்த தாக்குதலை நடத்தினோம் என்று இந்து ரக்‌ஷா தளம் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார்.