ஜார்க்கண்டில் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து பீகாரின் கயா நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள டணுவா காட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துக்கு முன்னாள் லாரி ஒன்று இரும்புக் கம்பிகள் ஏற்றிக்கொண்டு சென்றிருந்தது. அதிகவேகத்தில் வந்த பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின் புறத்தில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 11 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் நடத்தியதில் பேருந்தில் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.