JEE தேர்வை ஒத்திவைக்க கோரிய தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று JEE முதன்மை தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
JEE தேர்வை ஒத்திவைக்க கோரிய தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று JEE முதன்மை தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. IIT, NIT, IIIT போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர JEE (Joint Entrance Exam) எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இவை JEE முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரண்டு கட்டங்களாக NTA (National Test Agency) எனப்படும் தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வந்த நிலையில், 2022-23 ஆம் கல்வியாண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி இந்தாண்டுக்கான முதல்கட்ட தேர்வு ஏப்ரல் 21 முதல் மே 4 ஆம் தேதி வரையும், 2 ஆம் கட்ட தேர்வு மே 24 முதல் 29 ஆம் தேதி வரையும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை முன்னர் அறிவித்திருந்தது. இதனிடையே முதன்மை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். போர்டு தேர்வுகள் நடைபெற இருப்பதால் மாணவர்களை பெரும் குழப்பத்தில் இருந்தனர். அதாவது, இரண்டு தேர்வுகளின் தேதிகளும் ஒன்றாக வருவதால், போர்டு தேர்வுக்கு தயாராவதா அல்லது JEE Main தேர்வுக்கு தயாராவதா என்று தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.

இந்நிலையில், தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை JEE முதன்மை தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்வு ஜூன், ஜூலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட JEE Main தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் எனவும், 2 ஆம் கட்ட JEE Main தேர்வு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட JEE Main தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்த நிலையில், 2 ஆம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
