இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் டெல்லியில் உள்ள பங்களா, ₹1,100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. 3.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சொத்தின் புதிய உரிமையாளர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் டெல்லியில் உள்ள பங்களா, ₹1,100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய குடியிருப்பு சொத்து ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது.
இந்த பங்களா, மத்திய டெல்லியில் உள்ள லுட்யென்ஸ் பங்களா மண்டலத்தில், 17 மோதிலால் நேரு மார்க் என்ற முகவரியில் அமைந்துள்ளது. இந்த பங்களா ஆரம்பத்தில் ₹1,400 கோடிக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 20% விலை குறைப்புக்குக் காரணம் என்ன என்று எந்தத் தகவலும் இல்லை.
புதிய உரிமையாளர் யார்?
3.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சொத்தின் வாங்குபவர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்தியாவின் முன்னணி குளிர்பான துறை தொழிலதிபர் ஒருவர் இதனை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய உரிமையாளர்கள்:
இந்த சொத்து இதற்கு முன்னர் ராஜஸ்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வசம் இருந்தது. இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் விதமாக, வாங்குபவர்களின் சட்டப் பிரதிநிதிகள் சமீபத்தில் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டனர்.
அதில், "எங்கள் வாடிக்கையாளர்கள் இந்த சொத்தை வாங்க ஆர்வமாக உள்ளனர். தற்போதைய உரிமையாளர்கள் ராஜ்குமாரி கக்கர் மற்றும் பீனா ராணி ஆவர். இந்த சொத்தின் மீது வேறு யாருக்கேனும் உரிமை இருந்தால், ஏழு நாட்களுக்குள் செல்லுபடியாகும் ஆவணங்களுடன் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், அத்தகைய உரிமை எதுவும் இல்லை என்று கருதப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
லுட்யென்ஸ் பங்களா:
பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லுட்யென்ஸ் பெயரால் அழைக்கப்படும் இந்த மண்டலம், 1912 மற்றும் 1930-க்கு இடையில் டெல்லியின் ஏகாதிபத்திய மையமாக உருவாக்கப்பட்டது. தற்போது, இது 28 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 3,000 பங்களாக்களைக் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலானவை அமைச்சர்கள், நீதிபதிகள், மூத்த அதிகாரிகள் மற்றும் தூதர்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டவை. எனினும், சுமார் 600 பங்களாக்கள் தனிநபர்களுக்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது.
சுதந்திர இந்தியாவின் ஆரம்ப ஆண்டுகளில் நேரு வாழ்ந்த இந்த பங்களா, இப்போது ஒரு தொழிலதிபரின் சொத்து பட்டியலில் இணைந்துள்ளது.
