வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஜாவத் புயல் மேலும் தீவிரமடைந்து ஓடிசா மாநிலம் புரி அருகே நாளை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஜாவத் புயல் மேலும் தீவிரமடைந்து ஓடிசா மாநிலம் புரி அருகே நாளை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாயன்று தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மெல்ல நகர்ந்து, அந்தமான் அருகே கடலின் மத்திய பகுதியில் நிலைகொண்டது. அடுத்த நாளில் மேலும் இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று புயல் சின்னமாக உருவானது.
வங்க கடலில் உருவான இந்த ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு பகுதியானது, மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளில் நகர்ந்து வியாழக்கிழமை இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்க கடலில் நிலைக்கொண்டிருந்தது. தொடர்ந்து , வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி, புயலாக வலுப்பெற்றது.
அந்தமான் அருகே வங்க கடலில் உருவான இந்த புயலுக்கு சவூதி அரேபியா வழங்கிய ’ஜாவத்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயலானது, வடக்கு ஆந்திரா மற்றும் கிழக்கு ஒடிசா கடல் பகுதிகளில் இன்று காலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புயல் காரணமாக, ஆந்திரம் ,ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டு, அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்தும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது வங்க கடலில் நிலைக்கொண்டுள்ள ஜாவத் புயலானது, மேலும் தீவிரமடைந்து நாளை ஒடிசா மாநிலம் புரி அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில்,”வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஜாவத் புயல் கடந்த 1 மணிநேரத்தில் வடக்கு நோக்கி நகர்வதைக் காண முடிகிறது. அடுத்த 12 மணிநேரத்திற்கு அதே நிலை தொடரும். புயலின் தீவிரத்தை பொறுத்து மேலும் வலுவடையும். இந்த புயல் நாளை ஒடிசா மாநிலம் புரியின் கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் படிப்படியாக வலுவிழக்கும்.
இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும். மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரம் மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகள், வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், சிலவேளைகளில் 70 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்லவேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
