ஜார்கண்ட் பட்டினிச்சாவின் அடுத்த கொடுமை...சிறுமியின் தாய் கிராமத்தைவிட்டு விரட்டியடிப்பு
ஜார்கண்ட் மாநிலம், சிம்டேகா மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் பட்டினியால் சிறுமி பலியான விவகாரத்தில், அவரின் தாயை கிராம மக்கள் துரத்தியடித்த கொடுமை நடந்துள்ளது.
சிம்தேகா மாவட்டம், கரிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் கொய்லி தேவி. இவரின் ரேஷன்கார்டு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை. இதனால், ரேஷனில் பொருட்கள் வாங்கமுடியாமல் தவித்துள்ளார்.
வீட்டில் உணவு இல்லாதநிலையில், 4 நாட்கள் பட்டினியால் வாடிய கொய்லிதேவியின் 11வயது மகள் சந்தோஷி குமாரி கடந்த வாரம் பட்டிணியால் பலியானார். ஆதார் கார்டுடன், ரேஷன்கார்டு இணைக்காமல் இருந்ததன் காரணமாக பொருட்கள் மறுக்கப்பட்டதால், பட்டணியில் ஒரு சிறுமி பலியான விவகாரம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ரேஷன்பொருட்கள் வாங்க ஆதார் தேவையில்லை என ஜார்க்ண்ட் அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கொய்லி தேவி தனது மகள் பட்டினியால் இறந்த விவகாரத்தை வெளியில் கூறி கிராமத்துக்கு அவப்பெயரை உண்டாக்கிவிட்டதாகக் கூறி கிராம மக்கள் அவரிடம் வெள்ளிக்கிழமை இரவு கடுமையாக வாக்குவாதம் செய்து சண்டையிட்டனர்.
மேலும், கிராமத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளனர், இதனால், அச்சமடைந்த கொய்லி தேவி, பக்கத்து கிராமத்தில் உள்ள சமூக ஆர்வலர் தாரா மணி சாஹூ வீட்டில் தஞ்சமடைந்தார்.
இந்த விவகாரம் குறித்து சமூக ஆர்வலர் தாரா மணி சாஹூ, கிராம நிர்வாகத்துக்கும், மாவட்ட போலீசாருக்கும் தகவல் அளித்தார். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து கொய்லி தேவியை மீண்டும் அவரின் கிராமத்துக்கு தகுந்த பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனர்.
மேலும், கிராமமக்கள் யாரும் கொய்லி தேவியை துன்புறுத்தக்கூடாது,அவ்வாறு செய்பவர்கள் மீது புகார் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம நிர்வாகத்தினரும், போலீசாரும் எச்சரிக்கை செய்தனர்.
இது குறித்து சிம்தேகா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்ட் ஏ.கே.சிங் கூறுகையில், “ கொய்லி தேவியிடம் நடத்திய விசாரணையில் ஊரில் உள்ள பெண்கள் சிலர் நேற்றுஇரவு அவரின் வீட்டுக்கு வந்து சண்டையிட்டுள்ளனர். பட்டினியால் மகள் இறந்ததை வெளியில் கூறி கிராமத்துக்கு அவப்பெயரை உண்டாக்கிவிட்டாய் எனக் கூறி கொய்லி தேவியிடம் சண்டையிட்டுள்ளனர்.
இதனால், அச்சமடைந்த கொய்லி தேவி சமூக ஆர்வலரிடம் வீட்டில் அடைக்கலமானார். இப்போது மீண்டும் கொய்லிதேவி அழைத்துவரப்பட்டு தகுந்த பாதுகாப்புடன் வீ்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளார்” என்றார்.