ஹரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிகப் பெரிய பணக்காரர். அவரது தந்தை பெரும் நிலக்கிழார்.  அந்த இளைஞர் தனது தந்தையிடம் மிக விலையுயர்ந்த ஜாக்குவார் ரக சொகுசுக் காரை வாங்கித் தர கேட்டுள்ளார். 

ஆனால் அதற்கு அவரது தந்தை மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னிடம் ஏற்கனவே இருந்த பிஎம்டபிள்யூ சொகுசுக் காரை ஆற்றில் தள்ளியுள்ளார்.

மேலும் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார். நீரில் மிதந்து சென்று கொண்டிருந்த கார் ஆற்றில் இருந்த புற்களில் சிக்கி நின்றது. 
இதனைத் தொடர்ந்து ஊரில் இருந்த சில மக்களிடம் உதவி கேட்டு அந்த காரை மீட்க முயன்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் இரு சக்கர வாகனம் வாங்குவதற்குக் கூட பெரும் கஷ்டப்படும் நிலையில் , அந்த இளைஞர் பிஎம்டபிள்யூ சொகுசுக் காரை ஆற்றில் தள்ளியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.