January 14th day he Sabari malai Makara Jyoti

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி ஜோதி தரிசனம் நடைபெறும் என அற்விக்கப்பட்டுள்ளது.ங

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. 26-ந் தேதியுடன் நிறைவு பெற்ற மண்டல பூஜை மற்றும் வழிபாடுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்கு பின் 26-ந் தேதி இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

தற்போது மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் மீண்டும் நடை திறக்கப்பட்டு உள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

மகர விளக்கு பூஜையையொட்டி சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12-ந்தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக எருமேலி பேட்டை துள்ளல் 11-ந் தேதி நடைபெறும்.

16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இரவில் படி பூஜை நடைபெறுகிறது. 20-ந் தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும்.

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பம்பை, சபரிமலை, எருமேலி, நிலக்கல் உள்பட பக்தர்கள் குவியும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.