ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அறிவித்துள்ளார்.

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க, தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து அங்கு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன. இந்நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வீட்டை விட்டு வெளியேற அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

 

இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்றுகாலை ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 

இதனையடுத்து, மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது. சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரையும் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கையும் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனால், இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 28-ஆக குறைந்துள்ளது. அதேபோல் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. ஆகையால், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்ததையடுத்து, மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.