டெல்லியில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சதிகாரராகக் கருதப்படும் டாக்டர் முசாபரைக் கைது செய்ய காஷ்மீர் காவல்துறை இன்டர்போல் உதவியை நாடியுள்ளது.

டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய சதிகாரராகக் கருதப்படும் டாக்டர் முசாபரை கைது செய்வதற்காக ஜம்மு காஷ்மீர் காவல்துறை இன்டர்போல் உதவியை நாடியுள்ளது.

தலைநகர் டெல்லியில் மக்கள் அதிக அளவில் கூடும் செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி இரவு கார் வெடித்துச் சிதறிய கோரச் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 27 பேர் காயம் அடைந்தனர். இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் என உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சம்பவத்தை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற தற்கொலைப்படை பயங்கரவாதி என DNA பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருக்கலாம்

இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்கு முன்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூன்று மருத்துவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் அதீல் என்பவரும் அடங்குவார். அவரது சகோதரரான டாக்டர் முசாபர் என்பவரே இந்த பயங்கரவாதக் குழுவின் முக்கிய சதிகாரராகக் கருதப்படுகிறார்.

டாக்டர் முசாபர், வெடிப்பைச் செய்த டாக்டர் உமர் முகமது மற்றும் டாக்டர் முசம்மில் ஆகிய மூவரும், கடந்த 2021-ஆம் ஆண்டு துருக்கியில் வைத்து இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் முசாபர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளார். முதலில் துபாய் சென்ற அவர், தற்போது ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இன்டர்போல் உதவியை நாடிய காஷ்மீர் காவல்துறை

கார் வெடிப்புச் சம்பவத்தின் முக்கிய சதிகாரராகக் கருதப்படும் டாக்டர் முசாபரை உடனடியாகக் கைது செய்ய, காஷ்மீர் காவல்துறை தற்போது இன்டர்போல் (Interpol) உதவியை நாடியுள்ளது.

அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் (Red Corner Notice) வெளியிடவும், விரைவில் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் இன்டர்போலைக் கேட்டுக்கொண்டுள்ளது. இது சர்வதேச அளவில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளது.