இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் முடிவுக்கு வரவேண்டும் என்று எல்லை கட்டுப்பாடு பகுதியில் வசித்துவரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், கடந்த மாதம் 18-ம் தேதியன்று உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலில், 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு 35-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவங்களால், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எல்லைப்பகுதியில் ராணுவம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியை சுற்றி வசித்து வந்த ஏராளமான மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதோடு, அறுவடைக்கு தயாரான பயிர்கள் வீணாகும் நிலையில் உள்ளன.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் முடிவுக்கு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தங்களுடைய வீடுகளை இழந்து, உறவினர் வீடுகள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள மக்களிடையே, எப்போது தங்கள் இருப்பிடங்களுக்கு செல்வோம் என்ற தவிப்பு ஏற்பட்டுள்ளது.
வீடு, கால்நடைகள், பயிர்கள் உள்ளிட்டவற்றை விட்டுவிட்டு, வேறொரு இடத்தில் வசிப்பது, தங்களை மிகுந்த மனக்கவலையில் ஆழ்த்தியிருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
