ஜம்மு காஷ்மீர் எப்போதுமே இந்தியாவுக்கு தான் சொந்தம் : உச்சநீநீமன்ற தீர்ப்புக்கு அமித்ஷா வரவேற்பு..
370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அமைச்சர் அமித்ஷா வரவேற்றுள்ளார்.
370வது சட்டப்பிரிவை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு திங்கள்கிழமை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியிருந்தார்.
இதே போல் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, X தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ 370-வது சட்டப்பிரிவை ப்ழிப்பதற்கான முடிவை உறுதிசெய்த இந்தியாவின் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆகஸ்ட் 5, 2019 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்ய ஒரு தொலைநோக்கு முடிவை எடுத்தார். அதன் பின்னர் ஜம்மு காஷ்மீரில் அமைதியும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஒரு காலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளத்தாக்கில் வளர்ச்சியும் முன்னேற்றமும் மனித வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை கொண்டு வந்துள்ளன. சுற்றுலா மற்றும் விவசாயத் துறைகளில் உள்ள செழிப்பு, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு பகுதிகளிலும் வசிப்பவர்களின் வருமான அளவை உயர்த்தியுள்ளது.இன்று, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்யும் முடிவு முற்றிலும் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை நிரூபித்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் மற்றொரு பதிவில் “ 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன, மேலும் பிரிவினைவாதமும் வன்முறையும் இப்போது கடந்த கால விஷயங்கள். முழுப் பகுதியும் இப்போது கலாச்சார சுற்றுலா மூலம் எதிரொலிக்கிறது. ஒற்றுமையின் பிணைப்புகள் வலுப்பெற்று, பாரதத்துடனான ஒருமைப்பாடு வலுப்பெற்றுள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் எப்போது நமது தேசத்திற்கு சொந்தமானது, இனியும் அப்படியே இருக்கும்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தீர்ப்பு: பிரதமர் மோடி புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் நிரந்தர அமைதியை நிலைநாட்டவும், பிராந்தியத்தின் அனைத்து வளர்ச்சிக்கும் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. புதிய ஊக்குவிப்புகளுடன் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவது, அதிநவீன கல்வி உள்கட்டமைப்பை உருவாக்குவது அல்லது ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மூலம் அதிகாரம் அளிப்பது என எதுவாக இருந்தாலும், பிராந்தியத்திற்காக எங்கள் முழு பலத்தையும் தொடர்ந்து செலுத்துவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கட்சி வரவேற்பதாகக் கூறினார். அவரின் பதிவில் "பிரிவு 370 தொடர்பாக மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பாரதிய ஜனதா கட்சி வரவேற்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் 370 மற்றும் 35A, அதன் செயல்முறை மற்றும் நோக்கத்தை நீக்க எடுக்கப்பட்ட முடிவை உறுதி செய்துள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவின் விதிகளை மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அறிவித்தது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உச்ச நீதிமன்ற தீர்ப்பை வழங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த குடியரசுத் தலைவரின் உத்தரவு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 30, 2024க்குள் தேர்தலை நடத்தி, விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.