ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் தளபதி உமர் காலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது மிக முக்கியமான நடவடிக்கை என்று காஷ்மீர் போலீஸ் டிஜிபி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதன் முக்கிய தளபதியாக உமர் காலித் இருந்து வந்தார். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே துணை ராணுவ முகாம் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இது மிகப்பெரும் சதித்திட்டமாக கருதப்பட்டது. துரிதமாக செயல்பட்ட ராணுவத்தினர் இந்த சதித்திட்டத்தை முறியடித்தனர்.

இதற்கிடையே, ஹந்த்வாரா பகுதியில் சிறப்பு போலீஸ் அதிகாரி மற்றும் அவரது 7 வயது மகன் மீது தாக்கதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற பல்வேறு தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் – இ – முகமது அமைப்புக்கு காலித் உமர் மூளையாக செயல்பட்டு வந்தார். இவரது தலைக்கு பாதுகாப்பு படையினர் ரூ. 7 லட்சத்தை நிர்ணயித்தனர். இந்த நிலையில், லதூரா பகுதியில் காலித் முகமது பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. தீவிரவாதிகள் தப்பிச் சென்று விடாமல் இருக்க கூடுதல் வீரர்கள் லதூரா பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். என்கவுன்ட்டரின் முடிவில் தீவிரவாதி காலித் உமர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் டிஜிபி வைத் கூறுகையில், உமர் காலித் கொல்லப்பட்டது காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் முக்கியமான ஒன்று. வடக்கு காஷ்மீரில் ராணுவ முகாம்கள் மீது இவர் தலைமையில்தான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. என்கவுன்ட்டரில் காஷ்மீர் போலீஸ், சிறப்பு அதிரடிப்படை, ரிசர்வ் போலீசார் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டனர். இது ஒரு கூட்டு நடவடிக்கை என்றார்.

புத்காம் மாவட்டத்தின் காக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து ராணுவத்தினர் அங்கு தேடுதல் வேடடையை நேற்று மேற்கொண்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் சுபேதார் ராஜ் குமார் என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார்.