தமிழகத்தில் இளைஞர்கள், இளம்பெண்களின் போராட்டத்தால் இந்தாண்டே ஜல்லிக்கட்டு நடப்பது உறுதியாகிவிட்டது. முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டு பணிகளை கவனித்து கொண்டுள்ள வேளையில், மத்திய அரசும், இதில் இணக்கமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அவசர சட்டம் கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளும், சட்ட நிபுணர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் குறுக்கீடுகள் வராமல் இருப்பதற்காகதான் பன்னீர்செல்வம், டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

குறிப்பாக இந்தியாவையே ஒழிக்க வந்த விலங்கு நல ஆர்வலர்கள் என செயல்படும் புல்லுருவிகள், சில பொதுநல வழக்குகள் மூலம் தடை ஏற்படாமல் ,இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மாபெரும் எழுச்சி போராட்டத்துக்கு காரணமாக இருந்ததே உச்சநீதிமன்றத்தின் தடைதான். அதே உச்சநீதிமன்றம் தான் தற்போது ஜல்லிக்கட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் உதவி செய்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கான தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வர இருந்த சூழ்நிலையில், தீர்ப்பை இரண்டு வார காலத்துக்கு தள்ளி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். இதனால், என்ன லாபம் என்று கேட்டால், தமிழக அரசு கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு தீர்ப்பின் மூலமாக எந்த ஒரு பாதிப்பும் வராது.
அவசர சட்டத்துக்கு குறுக்கீடு இல்லாமல், இருப்பதற்காக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்ககி, விடுத்த கோரிக்கையை அடுத்து உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தீர்ப்பு ஆதரவாக வந்துவிட்டால், பிரச்சனை இல்லை. ஒருவேளை, எதிர்ப்பாக வந்தால், அவசர சட்டத்துக்கும் சிக்கல் வரும். இப்போது மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக தீர்ப்பும் தள்ளிபோய் இருக்கிறது. இதனால், தமிழக அரசு கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு எந்த பங்கமும், பாதகமும் யாராலும் ஏற்படுத்த முடியாது.

எனவே, அவசர சட்டம் கொண்டு வந்த மறுநாளே, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும்.
‘காளைகள் ஓடும். தமிழக இளைஞர்கள் தங்கள் வீரத்தை காண்பிப்பார்கள். என்பது நிச்சயம்.
