தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வணிகர் சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், அண்டை நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கனடா உள்பட பல நாட்டினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டார். இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வந்தன. இதனால், மாணவர்களின் போராட்டம் அதிகரித்தது.

இந்நிலையில், அதிமுக எம்பிக்கள், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் தற்போது, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்த பேச்சு வார்த்தையின்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவற்கு, அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து தமிழக எம்பிக்களை சந்திக்க மோடி தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் நேற்று முதல்வர் ஓபிஎஸ்ஸை மட்டும் சந்தித்தார்.
இந்நிலையில் வேறு வழியின்றி அதிமுக எம்பிக்கள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஜல்லிக்கட்டு கட்ட முழு ஒத்துழைப்பு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
