மத்திய அரசிடம் ‘பீட்டா’ அமைப்பு வலியுறுத்தல்
டெல்லியில் இன்று போராட்டம் நடத்த முடிவு
புதுடெல்லி, அக். 26-
தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு அனுமதிக்க ஆலோசித்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கூடாது என விலங்குகள் நல வாரியம் அமைப்பான ‘பீட்டா’ மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், தேவையற்ற மனித உயிரிழப்பும், காயங்களும் ஏற்படுவதாகவும் கருதி அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நலவாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் கடந்த 07.05.2014 அன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டை கடந்த 2 ஆண்டுகளாக நடத்த முடியாத நிலை உருவானது.
இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஜல்லிக்கட்டு பேரவை அமைப்பினரும், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய விலங்குகள் நல அமைப்பு தாக்கல் ெசய்த மனுவின் இறுதி விசாரணை வரும் நவம்பர் 9-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே விலங்குகள் வதைச் சட்டத்தில் திருத்தம் செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தேசிய விலங்குகள் நல அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபூரா டெல்லியில் நேற்று கூறுகையில், “ மத்திய அரசு விலங்குகள் வதைச் சட்டத்தில் திருத்தம் செய்து, அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை நடத்த திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், ரத்தம் சிந்தவைக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிக்கும், மாட்டுவண்டி பந்தயத்துக்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்கக் கூடாது.
மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து விலகி, காளைகளை துன்புறுத்துவதற்கும், கொல்லப்படுவதற்கும் அனுமதியளிக்கக் கூடாது. ஆபத்தான மற்றும் சட்டத்துக்கு விரோதமான கொடூர செயலான ஜல்லிகட்டு போட்டியை தடுத்து நிறுத்திய இந்திய அரசு சரியான செயல்களை செய்துள்ளது என நம்பிக்கையுடன் உலகம் நம்மை உற்றுநோக்குகிறது. அப்படி இருக்கையில் உச்சநீதிமன்றம் தடை செய்த இந்த ஆபத்தான விளையாட்டுக்கு அனுமதியளிக்க மத்திய அரசு முனையக்கூடாது.
ஜல்லிகட்டுக்கு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கூடாது என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நாளை(இன்று) போராட்டம் நடத்தப்படும்'' எனத் தெரிவித்தார்.
