ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல நடந்துகொள்கிறார் என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் எதிர்க்கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே அரசியல் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சென்ற ஆட்சியில் நடந்த தவறுகளை ஜெகன் மோகன் தோலுரிப்பதும், தற்போது நடக்கும் ஆட்சி பற்றி சந்திரபாபு விமர்சிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால், ஆந்திர அரசியல் எப்போதும் விறுவிறுப்பாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்ற பிறகு முதல் முறையாக விசாகப்பட்டினம் சென்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, கட்சி ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசு, மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பிற கட்சித் தலைவர்கள் மீது தேவையில்லாமல் பொய் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றது என விமர்சித்தார். 

நல்லவர்களுக்கு நல்லவராக தாம் திகழ்ந்ததாகவும் ஆனால், ஜெகன் மோகனோ சைக்கோ போல் நடந்து கொள்வதாகவும் சாடினார். இந்த ஆட்சி மிகவும் மோசமாக உள்ளதாகக் குற்றம்சாட்டிய சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகனைப் போன்ற மோசமான முதல்வரை இதுவரை பார்த்ததில்லை என்றார். அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.