பாலியல் வழக்குகளை விரைவாக விசாரித்து ஒரு மாதத்துக்குள் தண்டனை வழங்கும் மசோதாவை மசோதாவை ஆந்திரா சட்டப்பேரவையில் மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி எரித்துகொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் அவர்கள் நால்வரும் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். போலீஸாரின் இந்த நடவடிக்கையை மக்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் இந்த என்கவுன்டர் சம்பவத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் ஆந்திரா மாநில அரசு பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும்வகையில் மரணத் தண்டனை வழங்க சிறப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, ஆந்திராவில் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருடைய வழக்கு விசாரணையை ஒரு வாரத்தில் நடத்தி முடிக்கவும், அடுத்த 15 நாட்களுக்குள் குற்றவாளி என தண்டனை விதிக்கப்பட்டவருக்கு தூக்கு  தண்டனை விதிக்கும் வகையிலும்  சட்டத் திருத்தத்தை கொண்டு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.
பாலியல் வழக்குகளை துரிதமாக விசாரிக்கும் வகையில்  ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களில் பாலியல் வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதுகுறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், “நிர்பயா பெயரில் புதிய சட்டம் ஒன்றை இயற்ற உள்ளோம். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்குத் தீர்ப்பு வந்தும் அவர்கள் இன்னும் தூக்கிலிடப்படவில்லை. பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை அளிக்க வேண்டும். அதுவே சமூகத்துக்கு நல்லது” என்று தெரிவித்தார்.