ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் எதிர்க்கட்சி அந்தஸ்து கோரி கெஞ்சுவது போன்ற ஒரு போலியான AI வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அமைச்சர் நாரா லோகேஷ் கண்டனம் தெரிவித்து, கண்ணியமான அரசியலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் கெஞ்சுவது போன்ற போலியான (AI) வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வைரலாகும் ஏ.ஐ வீடியோ

தெலுங்கு தேசம் கட்சியை (TDP) ஆதரிப்பவர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவில், ஜெகன் மோகன் ரெட்டி 'தயவுசெய்து எங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுங்கள்' என்ற பதாகையை ஏந்தியபடி சாலையோரத்தில் அமர்ந்திருக்கிறார்.

அந்தச் சமயத்தில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மற்றும் அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் அந்த வழியாகச் செல்கின்றனர். அவர்கள் அருகில் வந்தவுடன், ஜெகன் மோகன் ரெட்டி எழுந்து அவர்களிடம் சென்று, தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கக் கோரி கெஞ்சுவது போல் இந்த வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த 'டீப்ஃபேக்' (Deepfake) வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Scroll to load tweet…

கண்டனம் தெரிவித்த நாரா லோகேஷ்

இந்த ஏ.ஐ வீடியோ சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இது குறித்து ஆந்திர அமைச்சரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ், தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர், "எனது அன்பான தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களுக்கு – இதுபோன்ற வீடியோ உருவாக்குவதன் பின்னணியில் உள்ள உணர்வை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், தனிப்பட்ட தாக்குதல்கள் ஒருபோதும் விரும்பத்தக்கது அல்ல. நாம் அரசியல் எதிரிகளாக இருக்கலாம், ஆனால் நமது பொது விவாதம் கண்ணியமாகவும் மரியாதையாகவும் அமைந்திருக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “நமது ஆதரவாளர்கள் அனைவரும் இதுபோன்ற பதிவுகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நமக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், நாம் நாகரிகத்தைக் கடைப்பிடிப்போம், ஆந்திரப் பிரதேசத்தை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான அரசியலில் கவனம் செலுத்துவோம்," என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.