ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. 

ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும், மாநில அந்தஸ்தை இழந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதேபோல், மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.  

இதற்கு எதிர்ப்புகள் அதிக அளவில் இருக்கும் நிலையில் இன்று வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,  370-ஐ ரத்து செய்து குடியரசுத் தலைவர் வழங்கிய ஒப்புதல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, உச்ச நீதிமன்றம் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு விரைவில் விசாரணை எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதேபோல், ஃபருக் அப்துல்லாவும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்வேன் என்று கூறியுள்ளார்.