வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்: போர்டல் வேலை செய்யவில்லையா? என்ன செய்ய வேண்டும்?
வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த துறையின் போர்டல் வேலை செய்யவில்லை எனில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வு அளிக்கப்பட்டுள்ளது

அரசாங்கம் நிர்ணயித்துள்ள தொகையை விட அதிகமான ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்தி வருகின்றனர். தாங்கள் செய்த செலவுகளை அதிகாரப்பூர்வமாக கணக்கு காட்டி வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான காலக்கெடுவையும் வருமான வரித்துறை நிர்ணயித்து வருகிறது.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ஆம் தேதியே வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளாக இருக்கும் நிலையில், 2022-23 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!
மத்திய அரசிடம் இதுவரை வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்பதால், வருமான வரிக் கணக்கை இன்றைய தினத்துக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வரி செலுத்துவோர் சரியான நேரத்தில் ஐடிஆர் தாக்கல் செய்யத் தவறினால் ரூ.5000 வரை அபராதம் செலுத்த வேண்டும். வரி அடுக்கின் கீழ் சில சலுகைகளையும் அவர்கள் இழக்க நேரிடும்.
அதேசமயம், வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், பலரும் வருமான வரி போர்டலை அணுகி வருகின்றனர். இதனால், அந்த போர்டல் திணறி வருகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் போர்டல் செயல்படாதது குறித்தும் புகார் அளித்துள்ளனர். கடைசி மணிநேர அவசரத்தில் அனைவரும் அந்த போர்டலை பயன்படுத்துவதால் அது முடங்குவதாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் தங்கள் குறைகளை #IncomeTaxPortalIssues போன்ற ஹேஷ்டேக்குகளின் கீழ் வாடிக்கையாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வருமான வரி போர்டல் வேலை செய்யவில்லை எனில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்காலிக சேமிப்பை அழிக்க வேம்ண்டும்; அதாவது கேச் கிளியர் செய்ய வேண்டும்; அதன்பிறகு மீண்டும் முயற்சிக்க வேண்டும் என வருமான வரித்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதன்பின்னரும் ஏதேனும் சிக்கல்களை சந்தித்தால், PAN, செல்போன் எண் ஆகியவற்றுடன் கூடிய உங்களது விவரங்களை orm@cpc.incometax.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால், வருமான வரித்துறையின் குழு உங்களை தொடர்பு கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று மாலை 6.30 மணி வரை சுமார் 6 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. இது கடந்த ஆண்டைவிட அதிகம் எனவும், நேற்று மட்டும் சுமார் 26 லட்சத்துக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதற்காக வரி செலுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கிறோம் எனவும் வருமான வரித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.