கர்நாடக அமைச்சர் சிவகுமார் வீடு மற்றும் அலுவலகங்களில்  நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 300 கோடி ரூபாய் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகுமார் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார்.

கர்நாடக  அமைச்சரவையில்  மின்சாரத்துறை அமைச்சராக  இருப்பவர் டி.கே.சிவக்குமார்.  இவரது வீடு, அலுவலகங்கள் உள்பட 64 இடங்களில் கடந்த 2-ந்தேதி முதல் 5 ஆம் தேதி வரை வருமானவரி சோதனை நடந்தது. 

அப்போது ரூ.11.43 கோடி ரொக்கம், ரூ.4.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த சோதனையில் கணக்கில் காட்டாத 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதுகுறித்த விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி  சிவக்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன் வழங்கியுள்ளது. மேலும் அவருடைய மாமனார் திம்மையா, சகோதரி பத்மா, நண்பர்கள் துவாரகநாத், சச்சின் நாராயண் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

இதையடுத்து சிவகுமார் இன்று பெங்களூரு வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முடிவில் சிவகுமார் கைத செய்யப்பட வாய்ப்பு உள்ளதால் கர்நாடக காங்கிரஸார் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.