'மேற்கு வங்கத்தில் இந்துவாக இருப்பது குற்றம்' சாதுக்கள் மீது நடந்த கும்பல் தாக்குதல்.. பாஜக கடும் கண்டனம்..
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் சாதுக்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் சாதுக்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.. இந்தச் சம்பவத்தின் வீடியோவும் X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சாதுக்களின் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, ஒரு கும்பலால் தாக்கப்பட்டதைக் காண முடிந்தது. சாதுக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸை (TMC) கடுமையாக சாடியது.
பாஜக ஐடி செல் தலைவர் அமித் மாளவியா தனது X கணக்கில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மேலு சாதுக்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னால் டிஎம்சி-யுடன் தொடர்புடைய குண்டர்கள் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும் அவரின் பதிவில் “ வரவிருக்கும் மகர சங்கராந்தி பண்டிகைக்காக சாதுக்கள் கங்காசாகருக்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களை ஆடைகளை அவிழ்த்து அவர்களை தாக்கியது. வீடியோவில், ஒரு சில ஆண்கள் நிர்வாண சாதுவை தாக்குவதைக் காண முடிந்தது. மற்ற சாதுக்களும் கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் உள்ள புருலியாவில் இருந்து இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பதிவாகியுள்ளது. பால்கர் வகையான படுகொலையில், மகர சங்கராந்திக்காக கங்காசாகருக்குச் சென்ற சாதுக்கள், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய குற்றவாளிகளால் தாக்கப்பட்டனர். மம்தா பானர்ஜியின் ஆட்சியில், ஷாஜஹான் ஷேக் போன்ற பயங்கரவாதிக்கு அரசு பாதுகாப்பு கிடைக்கிறது, மேலும் சாதுக்கள் அடித்துக்கொல்லப்படுகிறார்கள். மேற்கு வங்கத்தில் இந்துவாக இருப்பது குற்றம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020 பால்கர் படுகொலை
கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கட்சிஞ்சலே கிராமத்தில் இரண்டு இந்து சாதுக்களையும் அவர்களது ஓட்டுநரையும் ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. நாடு தழுவிய கொரோனா வைரஸ் லாக்டவுனின் போது அப்பகுதியில் திருடர்கள் நடமாடுவதாக வாட்ஸ்அப் வதந்திகளை நம்பிய கும்பல் சாதுக்களின் காரைத் தாக்கியது. சாதுக்களும் அவர்களது ஓட்டுநரும் திருடர்கள் என்று தவறாகக் கருதப்பட்டு அந்தக் கும்பலால் கொல்லப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.