தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக சமீபத்தில் உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் மட்டுமில்லாது தென்மாநிலங்கள் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. முக்கிய இடங்களில் பொது மக்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.

இதனிடையே இந்தியாவில் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவ இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் கடலோரங்களில் இருக்கும் கிராமங்கள், நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடற்கரை மற்றும் கலங்கரை விளக்கங்களில் காவல்துறை கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இந்திய விண்வெளி மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராக்கெட் ஏவுதளத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீஹரிகோட்டாவை சுற்றி இருக்கும் கிராமங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர காவல் படையினரும் அந்த பகுதில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.