உலகை இன்னும் சில வருடங்களில் உலுக்க இருப்பது ‘வாட்டர் வார்’, அதாவது தண்ணீருக்கான யுத்தம்! என்று சர்வதேச இயற்கை  மாற்றம் பற்றிய ஆய்வில் ஈடுபடும் உலக வல்லுநர்கள் அழுத்திக் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். நீர் வளத்தை மிக வேகமாக இழந்து கொண்டிருக்கும் தேசங்களில் இந்தியாவும் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது. 
சென்னை கடந்த கோடையில் சந்தித்த வறட்சியானது, ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி காப்ரியோ வரை திரும்பிப் பார்க்க வைத்ததை சொல்லியாக வேண்டும். இந்த நிலையில் இந்தியாவில் நதிகளை காக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம். அதன் ஒரு முகமாக தென்னிந்தியாவின் ஜீவ நதியான காவிரியை காக்கும் பொருட்டு, அதன் பாதைகளில் பல கோடி மரங்களை நடும் பொருட்டு ‘காவேரி கூக்குரல்’ எனும் பெயரில் மாபெரும் இயக்கம் ஒன்றை உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கிறார் ஈஷாவின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ். 


மாபெரும் மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றுவரும் இந்த இயக்கமானது...தனி மனிதர்களிடம் ‘ஒரு மரத்துக்காக வெறும் 42 ரூபாய் தாருங்கள்’ என்று கோரிக்கை வைக்கிறது. பெரிய மனமும், நிறைந்த வளமும் உள்ள பலர் இந்த இயக்கத்திற்காக பொருளுதவியை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பல கோடி ரூபாய் குவிகிறது, இன்னும் காவேரிக்காக குவிய இருக்கிறது. 
நம் தேசத்தை பொறுத்தவரையில் எந்த மிக நல்ல காரியத்தின் மீது வாழ்த்து பூக்கள் மழையாய் பொழியும் வேளையிலும், எதிர்மறை விமர்சனமாக சில திருஷ்டிப் பொட்டுக்களும் வைக்கப்படத்தான் செய்யும். அதிலும் பல கோடி ரூபாயை கையாள்கையில், ‘இது முறையாகத்தான் செலவு செய்யப்படுகிறதா?’ எனும் விமர்சனமும் கிளப்பப்படத்தான் செய்யும். 
எல்லா விஷயங்களிலும் தெளிந்த நீரோடை போல், திறந்த புத்தகம் போல், வெளிப்படைத்தன்மையுடன்  இருந்து கொள்ளும் ஈஷா நிர்வாகம் இந்த ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் நிதி விஷயத்திலும் துல்லியமான நேர்மையுடன் நடந்து கொண்டிருக்கிறது. 
எப்படி தெரியுமா?...இந்த நிதியை நிர்வகிக்கப்போவது ஈஷா இல்லை. அதற்குப் பதிலாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, உலக வன உயிர் நிதியத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட ஒன்பது பேர் அடங்கிய குழுதான் இந்த நிதியை நிர்வகிக்க இருக்கிறது. 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி நதிக்கு புத்துயிரூட்டவும் ‘காவேரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். இவ்வியக்கத்தின் மூலம் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் காவேரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் மரக் கன்றுகள் உற்பத்தி செய்வதற்காக பொதுமக்களிடம் இருந்து ஒரு மரக் கன்றுக்கு ரூ.42  என்ற முறையில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்படும் கோடிக்கணக்கான நிதியை ஈஷா அறக்கட்டளை நிர்வகிக்க போவது இல்லை.

அதற்கு பதிலாக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு.அரிஜித் பஷயத் (சூழலியல் பாதுகாப்புக்காக வலுவான சட்டப் போராட்டம் நடத்தியவர்), பத்ம பூஷண் விருது பெற்ற பிரபல பெண் தொழில் அதிபரும் பயோகான் நிறுவனத்தின் தலைவருமான திருமதி.கிரண் மசூம்தார் ஷா (டைம் பத்திரிக்கை வெளியிட்ட உலகளவில் ஆளுமைமிக்க பெண் தொழில் முனைவோர் பட்டியலில் இடம்பெற்றவர்), உலக வன உயிர் நிதியத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி திரு.ரவி சிங், மத்திய நீர் வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையின் முன்னாள் செயலாளர் திரு.சசி சேகர், மத்திய வேளாண் துறையின் கீழ் இயங்கும் சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தக அமைப்பின் முன்னாள் மேலாண் இயக்குநர் திரு.பிரவேஷ் சர்மா, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் துணை தலைவர் திரு.பி.முத்துராமன், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் திரு.ஏ.எஸ்.கிரண் குமார், கர்நாடக அரசின் முன்னாள் கூடுதல் தலைமை செயலர் திரு.டி.என்.நரசிம்ம ராஜூ,  இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் (சிஐஐ) இயக்குநர் திரு.சந்திரஜித் பானர்ஜி ஆகிய 9 பேர் அடங்கிய குழு தான் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் நிதிகளை நிர்வகிக்க உள்ளது. மேலும், வரவு செலவுக் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக மதிப்புமிக்க ஒரு தணிக்கை குழுவும் அமைக்கப்பட உள்ளது.

(இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு: https://www.ishaoutreach.org/en/cauvery-calling/blog/our-board-members)

ஏற்கனவே, வேளாண் காடு முறைக்கு மாறும் விவசாயிகளுக்கு முதல் 4 ஆண்டுகள் மானியம் வழங்க இரு மாநில அரசுகள் கொள்கை அளவில் சம்மதம் தெரிவித்துள்ளன. காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரங்கள் வளர்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது