பழைய போஸ்டரைக் காட்டி விமர்சித்த காங்கிரஸ்... வசமான பதிலடி கொடுக்கும் பாஜக!
மோடி அரசை தாக்க காங்கிரஸ் பழைய படத்தைத் தேடிப் பிடித்து பயன்படுத்தியதில் ஆச்சரியமில்லை. இது வெட்கக்கேடானது என பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கூறியுள்ளார்.
G20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தலைநகர் டெல்லியில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் போர்டுகளில் ஒன்று, உலக தலைவர்களை அவமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள பாஜக, காங்கிரஸ் கூறுவது பொய் என்று நிரூபித்துள்ளது.
ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, உலகின் மிகவும் பிரபலமான தலைவர் பிரதமர் மோடி தான் என்று கூறி வாழ்த்து தெரிவிக்கும் கட்அவுட் வைத்திருப்பதாகக் கூறி, டெல்லி பாஜக தலைவர் விஜய் கோயலைச் சாடியுள்ளார்.
ஆனால், அந்தப் பதிவில் பவன் கேரா இணைத்திருந்த படத்தில், பிரதமர் மோடி, பிரபலமான தலைவர்கள் குறித்த ஆய்வு ஒன்றில் 78 சதவீத ஏற்புடன் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் என்றும், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 40 சதவீத ஏற்பை மட்டுமே பெற்றுள்ளார என்றும் கூறுகிறது. மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாகதான் இருக்கிறார்கள் என்றும் பேனரில் கூறப்பட்டுள்ளது.
G20 Summit 2023: உலகமே உற்று நோக்கும் ஜி20 உச்சி மாநாடு! தலைமைப் பொறுப்பில் இந்தியா சாதித்தது என்ன?
ஆனால், பவன் கேரா பகிர்ந்த படம் பல மாதங்கள் முன்பு எடுக்கப்பட்டுள்ளது என பாஜகவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்பவன் கேராவின் இந்தப் பதிவை தானும் பகிர்ந்து பின், நீக்கிவிட்டார். அவருக்குப் விளக்கம் அளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா, "உங்கள் சகாவான பவன் கேரா, பொய்ச் செய்திக் காட்டி அவதூறு பரப்புகிறார். அத்தகைய போஸ்டர் எதுவும் வைக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும், "ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, மோடி அரசை தாக்க காங்கிரஸ் பழைய படத்தைத் தேடிப் பிடித்து பயன்படுத்தியதில் ஆச்சரியமில்லை. இது வெட்கக்கேடானது. இது எதிர்க்கட்சிகள் எந்த வகையிலும் அர்த்தமுள்ள விமர்சனம் செய்யவில்லை என்பதைக் காட்டுவது மட்டுமன்றி, அவர்களின் அரசியல் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்துகிறது" என்று சாடியுள்ளார். ஆனால், அமித் மாளவியாவும் சிறிது நேரத்தில் தனது ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார்!
செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டிற்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் டெல்லிக்கு வரவுள்ளனர். அதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட உலகத் தலைவர்கள் செப்டம்பர் 8 முதல் டெல்லிக்கு வரத் தொடங்குகின்றனர்.
வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாய்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83.22 ஆகச் சரிவு!