is justice denied for supreme court judges
நீதித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகிய 4 பேரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் மகிழ்ச்சியாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை. வேறு வழியே இல்லாமல்தான் சந்திக்கிறோம். கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை. விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
உச்சநீதிமன்றத்தில் தற்போது ஜனநாயகம் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை சரி செய்யப்படவில்லை என்றால், ஜனநாயகத்தை காக்க முடியாது என கருதுகிறோம். ஜனநாயகத்திற்கு சுதந்திரமான நீதிபதி தேவை. உச்சநீதிமன்றத்தில் உள்ள நிர்வாக குளறுபடிகள் தொடர்பாகவும் அவற்றை சரிசெய்ய வேண்டும் எனவும் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினோம்.
ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களது முயற்சி தோல்வியடைந்தது. சில விஷயங்கள் முறைப்படி நடக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் முறைப்படி பின்பற்றப்படவில்லை. தலைமை நீதிபதியிடம் முறையிட்டும் பலனில்லை என்பதால் தான், எங்களது கவலைகளை மக்களிடத்தில் தெரிவிக்க விரும்புகிறோம்.
நீதித்துறையில் குளறுபடிகள் நீடித்தால், ஜனநாயகம் நிலைக்காது. உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க நாங்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்து விட்டது. உச்சநீதிமன்றத்தில் அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதி மட்டுமே எடுக்கிறார். தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வது குறித்து நாட்டு மக்களே முடிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நாட்டுக்கே நீதி சொல்லும் நீதிபதிகளுக்கே நீதி கிடைக்கவில்லை என மக்கள் மன்றத்தை நாடியுள்ள விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால், நீதி கேட்டு நீதிமன்றத்துக்கு செல்வதுதான் வழக்கம். ஆனால் தற்போது மாறாக நீதிபதிகளுக்கே நீதி கிடைக்காததால் மக்கள் மன்றத்தை நாடியுள்ளனர்.
