இந்தியாவில் ஆன்லைன் மருந்து வர்த்தகத்தில் கோலோச்சும் சீனா; பிடியை இறுக்க மத்திய அரசு திட்டம்!!
இந்தியாவில் ஆன்லைன் மருந்து விற்பனை வர்த்தகத்தில் சீனா 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்து இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அரசியல் மற்றும் எல்லை தொடர்பான சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இதற்கிடையிலும் இந்தியாவில் சீனாவின் வர்த்தக முதலீட்டை, ஆளுமையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதன் முதற்கட்டமாக, இந்தியாவில் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்கப்படுவதை கடுமையாக கண்டிப்பதுடன், அதற்கு தடை விதிப்பதிலும் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவில் எந்த மாற்றங்களையும் செய்து கொள்ள விரும்பவில்லை. இந்தியாவில் மட்டும் ஆன்லைன் மருந்து விற்பனை வர்த்தகத்தில் சீனா 20,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்து இருக்கிறது.
இ பார்மஸியில் சீனாவின் கை ஓங்குவதை இந்தியா விரும்பவில்லை. இது தேசியப் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படுத்தும் மற்றும் அத்தகைய முக்கியமான துறையில் அதன் ஆதிக்கத்தை மத்திய அரசு விரும்பவில்லை. இருப்பினும், இந்தத் துறையில் ரூ. 50,000 கோடிக்கு மேல் அந்நிய நேரடி முதலீடு இருப்பதால் ஆன்லைன் மருந்து விற்பனையை எளிதில் தடை செய்ய முடியாது என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒரே இரவில் நடந்து விடாது என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்திருக்கும் பேட்டியில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோடி ஒரு சிறந்த மனிதர் என பாகிஸ்தானியர் ஒருவர் புகழாரம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
இந்தியாவில் இந்த வர்த்தகத்தில் சீன நிறுவனங்களின் முதலீடு அதிகமாக இருப்பதால், மத்திய அரசு உடனடியாக எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது என்று கூறப்படுகிறது. இவர்கள் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது. அமேசான், ப்ராக்டோ, டாடா1எம்ஜி, பார்ம் ஈஸி, அப்பல்லோ, ஜீலாப்ஸ் மற்றும் ஹெல்த்கார்ட் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உரிய உரிமம் இல்லாமல் ஆன்லைனில் மருந்துகளை விற்றது குறித்து ஏற்கனவே இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசும் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால், இந்த நோட்டீசுக்கு இந்த நிறுவனங்கள் அளித்திருந்த பதிலில் மத்திய அரசுக்கு திருப்தி இல்லை என்ற தகவல் வெளியாகி இருந்தது.
ஆன்லைன் மருந்து விற்பனையை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் நிலையில் தரம் குறைந்த மருந்துகளை விற்கக் கூடும் என்பதுடன் முக்கிய மருந்துகள் தேவைப்படும்போது, அவற்றை தடை செய்யவும் அல்லது விற்பனையை குறைக்கவும் செய்யலாம் என்ற அச்சமும் மத்திய அரசுக்கு எழுந்துள்ளது.
ஏற்கனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான ரசாயன மூலப் பொருட்களை, இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவில் இருந்துதான் 80% இறக்குமதி செய்கின்றன. எனவே, சீனா மீது இந்த வர்த்தகத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்திய மருந்து நிறுவனங்கள் பிளவுபட்டுள்ளன.
Gurugram: கொரோனா அச்சத்தால் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய தாய், மகன் மீட்பு
உலகளவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளின் விலைதான் குறைவாக இருக்கிறது. குறைந்த மூலதன செலவில் மருந்துகளை தயாரிக்கப்படுகிறது. மருந்து தயாரிப்பில் இன்று உலக நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்காவில் பயன்படுத்தும் மாத்திரைகளில் மூன்றில் ஒன்று இந்திய தயாரிப்பாக உள்ளது. இதேபோல், பிரிட்டனிலும் நான்கில் ஒன்று இந்திய மாத்திரையாக உள்ளது.
இருந்தாலும், 42 பில்லியன் டாலர் அளவிற்கு மருந்தக வர்த்தகத்தை கொண்டிருக்கும் இந்தியா, மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருட்களுக்கு சீனாவை நம்பி இருக்கிறது. சீனாவில் இருந்து மூலப் பொருட்கள் இறக்குமதியை அடுத்த பத்தாண்டுகளில் குறைப்பதற்காக இந்தியாவில் மூலப் பொருட்கள் தயாரிப்பதற்கு என்று நாடு முழுவதும் 32 நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் கொண்டு வந்திருந்தது. இது முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும்போது, சீனாவை நம்பி இருக்கும் மூலப் பொருட்களுக்கான தேவையை 35% குறைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
மருந்துத் துறையைப் பொறுத்தவரை, சீனாவை பெரிதும் நம்பியிருக்கும் 53 வகையிலான மூலப் பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய தனியார் இந்திய நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2 பில்லியன் டாலர் அளவிற்கு மத்திய அரசு ஊக்கத்தொகை ஒதுக்கி இருந்தது. 2025 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு உற்பத்தியை 520 பில்லியன் டாலராக உயர்த்த, அனைத்துத் துறைகளிலும் உள்ள நிறுவனங்களை ஊக்குவிப்பதை 'உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்திட்டம்' நோக்கமாக கொண்டுள்ளது.