Irome sharmila statement

அதிர்ச்சி தோல்வியில் இரோம் ஷர்மிளா…அரசியலை விட்டு விலகுவதாக அறிவிப்பு..

மணிப்பூரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரோம் ஷர்மிளா படுதோல்வி அடைந்ததையடுத்து அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப்படை சட்டத்தை எதிர்த்து இரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

அவரை கைது செய்து சிறையில் அடைத்த போதும் தனது போராட்டத்தை இரோம் ஷர்மிளா கைவிடவில்லை.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது உண்ணாவிரதத்தை கைவிட்ட ஷர்மிளா தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி என்ற புதிய கட்சி யைத் தொடங்கி மாநிலம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தினார்.

இரோம் ஷர்மிளாவுக்கு ஆம் ஆத்மி எம்.பி., ஒருவர் நிதியுதவி செய்தார். அவர் இந்த தேர்தலில், முதலமைச்சர் ஒக்ரம் இபோபி சிங்கை எதிர்த்து தவுபெல் தொகுதியில் போட்டியிட்டார்.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது ,இதில் இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

முதலமைச்சர் ஒபோபி சிங், 18,649 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ., வேட்பாளர் 8,179 ஓட்டுக்கள் பெற்றார். இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட இரோம் ஷர்மிளா படுதோல்வி அடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இரோம் ஷர்மிளா, இந்த தேர்தலில் பணமும், அதிகாரமும் விளையாடியதை நேரடியாக தன்னால் பார்க்க முடிந்தது என குற்றம் சாட்டினார். மேலும் அரசியலை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார்.