பாகிஸ்தான் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டதில் 16 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனிடையே தர்மசாலாவில் நடந்த ஐபிஎல் போட்டி மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

இந்தியா பாகிஸ்தான் போர்

பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மையத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக பாகிஸ்தான் நேற்று இரவு முதல் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டது. இதில் 16 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியது. 

இந்தியா மீது ட்ரோன் ஏவுகனை தாக்குதல்- முறியடித்த ராணுவம்

இதில் ராவல்பிண்டி, லாகூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு இடங்கள் தாக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை முதல் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவை நோக்கி ட்ரோன்களை அடுத்தடுத்து செலுத்தியது. இதனை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து முறியடித்தது. மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் 3 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனிடையே தர்மசாலாவில் டெல்லி - பஞ்சாப் இடையே ஐபிஎல் போட்டியானது நடத்தப்பட்டது. இந்த போட்டி 10 ஓவர் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு போட்டி நிறுத்தப்பட்டது.

ஐபிஎல் போட்டி பாதியில் ரத்து

இதனையடுத்து மைதானத்தில் இருந்த ரசிகர்களை வெளியேற்றப்பட்டனர். மேலும் கிரிக்கெட் வீரர்களும் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர். இதே போல பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எல்லையோரத்தில் பதற்றமான நிலை நீடிக்கிறது.