ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. 

இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அவசரமாக விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி கூறிவிட்டதையடுத்து ப.சிதம்பரம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 5 நாள் சிபிஐ விசாரிக்க சிறப்பு நீதிமன்றம், அனுமதி அளித்தது. 

இந்நிலையில், சிபிஐ.,யின் 5 நாள் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் ஏ.எஸ்.போபண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துவிட்டதால் அவரது முன்ஜாமீன் மனு காலாவதி ஆகிவிட்டதாகதானே அர்த்தம்? என கூறி ப.சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அமலாக்கத்துறை தொடர்பான வழக்கும் விசாரணை நடைபெற்று வருகிறது.