ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு 3-முறையாக சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

மும்பையை சார்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்று தருவதற்கு ரூ.305 கோடி சட்டத்திற்கு புறம்பாக பணப்பரிமாற்றம் செய்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த 20-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை கடந்த 9 நாட்களாக சிபிஐ விசாரித்து வந்தது. அந்த காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

 

அப்போது, சிபிஐ தரப்பில் ப.சிதம்பரத்திடம் பல விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் சிபிஐ காவலை எதிர்த்து தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 2-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்றனர். 

இதனிடையே, செப்டம்பர் 2-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் வரை சிபிஐ காவலில் இருக்கத் தயார் என ப.சிதம்பரம் தெரிவித்தார். 400-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தேன். எந்த ஆவணமும், ஆதாரமும் எனக்கு எதிராக இல்லை. என ப.சிதம்பரம் கூறினார். திங்கள் கிழமை வரை காவலில் இருக்க தயார் என ப.சிதம்பரம் கூறியதை தொடர்ந்து 3-முறையாக காவல் நீட்டித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.