ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் நீதிமன்ற காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் விரக்தியில் உள்ளதாக டெல்லி வட்டார தகவல் தெரிவிக்கின்றன. இதனால், இந்த 5 பேரை தவிர வேறு யார் வந்தாலும் என்னுடைய அனுமதி இல்லாமல் உள்ள விட வேண்டாம் ப.சிதம்பரம்  கூறியுள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டு விவகாரத்தில் 15 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரித்த நிலையில் நேற்று முன்தினம் ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் உடனடியாக திகாரில் உள்ள 7-வது சிறை அறையில் அடைக்கப்பட்டார். இதில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து தரப்பட்டுள்ளது. நேற்று காலை வழக்கம் போல் காலை எழுந்த ப.சிதம்பரம் அமைதியாகவே காணப்பட்டுள்ளார். குறிப்பாக அவருக்காக இருக்கும் இசட் பிரிவு பாதுகாவலர்கள், சிறைத்துறை அதிகாரிகள் என யாரிடதிலும் எதையும் பேசமால் மவுனமாக இருந்து வந்தார். 

முதல் வகுப்பு என்பதால் காலை உணவாக கஞ்சி மட்டும் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ப.சிதம்பரம் 5 பேரை மட்டும் தான் சந்தித்து பேச விரும்புகிறேன். வேறு யார் வந்தாலும் என்னுடைய அனுமதி இல்லாமல் உள்ள விட வேண்டாம். ஏனெனில் நான் இருக்கும் நிலமையில் பலரையும் சந்திக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் அவர் கொடுத்துள்ள பெயர் பட்டியலில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம், இரண்டு வழக்கறிஞர்கள் உட்பட ஐவரின் பெயர்கள் மட்டும் உள்ளது. மேலும் அவரது மனைவி நளினி பெயர் கூட அதில் குறிப்பிடவில்லை என சிறைத்துறை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில், ப.சிதம்பரத்தை பார்க்க அவரது மனைவி நளினி சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேற்று காலை திகார் சிறைக்கு சென்றனர்.ஆனால் கார்த்தி மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டார். அப்போது தந்தையை பார்த்து கார்த்தி சிதம்பரம் கண் கலங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கில் அடுத்தக்கட்டமாக என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து இருவரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர், ப.சிதம்பரத்தை பார்க்க காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் வந்த போதும் அவர்களை பார்க்க அவர் மறுத்துவிட்டார்