ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நாளை மதியம் 12 மணிவரை முள்ளாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி கூறிவிட்டதையடுத்து கடந்த வாரம் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

 

இந்த மனு கடந்த வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திங்கள் கிழமை வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நாளை மதியம் 12 மணிவரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது. முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை தொடரும் என நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் ஏ.எஸ்.போபண்ணா அமர்வு கூறியுள்ளது. முன்னதாக சிபிஐ கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.