ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 30-ம் தேதி வரை சிபிஐ காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது, சிபிஐ தரப்பில் அமலாக்கத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் இன்னும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் காவலை மேலும் 5 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே, 5 நாட்கள் காவலில் எடுத்ததில், ப.சிதம்பரத்திடம் என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து விளக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுவரை நடந்த விசாரணை விவரத்தை சி.பி.ஐ. தெளிவாக விளக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் கூறியது.

மேலும், கடந்த 5 நாட்களாக விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும் போது, எதோ ஒரு சில துண்டு சீட்டை காட்டி விட்டு ஆதாரம் என்கிறார்கள், உண்மையான ஆதாரம் இருந்தால் கொடுக்கலாமே? எந்த ஆதாரத்தையும் காட்டாமல் ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றால் எப்படி என கூறினார். 

இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிபிஐ கோரிக்கையை ஏற்று ப.சிதம்பரத்தின் காவலை ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 4 நாட்கள் விசாரணை நிறைவு பெற்ற பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்