நான் பொறுப்பு மிக்க குடிமகன், ஜாமீன் கிடைத்தாலும் வெளிநாடு செல்ல மாட்டேன் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் விளக்க மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 11-ம் தேதி மனு தாக்கல் செய்தார். “அரசியல் பழிவாங்கும் நோக்கில் தன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதனால் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் கைட் முன்னிலையில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் ஜாமீன் தந்தால் வெளிநாடு தப்பிச் சென்று விடமாட்டார் என வாதிட்டார். ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவராக கருதப்படும் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மற்றும் ஆடிட்டர் ஒருவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளனர். ஆனால் ப.சிதம்பரம் இறுதியாகத்தான் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டள்ளார் என வாதிட்டார். இதற்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இருதரப்பு வாதங்களும் இன்று முடிவடையாத சூழ்நிலையில் வழக்கின் விசாரணை நாளை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தெரியவரும்.